HomeUncategorizedதிருவள்ளுவ மாலை 16 - 20 of 55 பாடல்கள்

திருவள்ளுவ மாலை 16 – 20 of 55 பாடல்கள்

திருவள்ளுவ மாலை 16 – 20 of 55 பாடல்கள்

நத்தத்தனார்

16. ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்–போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

விளக்கவுரை :

ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

முகையலூர்ச் சிறுகருத்தும்பியார்

17. உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால–வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா
ரெப்பா வலரினு மில்.

விளக்கவுரை :

திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.

[ads-post]


ஆசிரியர் நல்லந்துவனார்

18. சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந்–தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா
ரெப்பா வலரினு மில்.

விளக்கவுரை :

எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

கீரந்தையார்

19. தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான்
முப்பாலி னாற்பான் மொழிந்தவ– ரெப்பாலும்
வைவைத்த கூர்மேல் வழுதி மனமகிழத்
தெய்வத் திருவள் ளுவர்.

விளக்கவுரை :

பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.

சிறுமேதாவியார்

20. வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு
ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்னவகை.

விளக்கவுரை :

திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments