HomeUncategorizedசித்தரியல்

சித்தரியல்

சித்தரியல் ஆராய்ச்சி நிலையம்

இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தை விட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.

நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.

இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.

சித்தர்கள் கண்டறிந்த வாதவித்தையே சிறந்த விஞ்ஞான, ரசாயன ஆராய்ச்சியாகும். உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும் பல கடல் பொருட்கள், விலங்குகளின் உடல்களில் இருந்து கிடக்கும், கஸ்தூரி, புனுகு, சலம், சாணம் முதலியவற்றின் குணங்களை எல்லாம் கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்களே. அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இவ்வாறு ஆராய்ந்து இவற்றைச் சேர்த்தால் இன்ன மருந்து கிடைக்கும். இன்ன நோய்க்கு இன்ன மருந்து. இந்த மருந்து இன்னின்ன நோய்களுக்குப் பலன் தரும், நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இன்று இருப்பது போல விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாத அந்தக்காலத்தில் காட்டிலும், மலையிலும், குகையிலும் வாழ்ந்த இந்த பேரறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தி ஒவ்வொன்றின் மருத்துவப் பண்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்துள்ளது வியப்பளிக்கும் செய்தியாகும். இதேபோல வானவியல், சோதிடம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தெளிவான முடிவுகளை அறிவித்தே உள்ளனர்.

ஆகவே சித்தர்களை உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றும், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று கூறலாம். மனிதனும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், இக் காலத்தில் உள்ளது போன்று பல்வேறு உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில்மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை தம் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் பாடி சென்றுள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

அத்தகைய சித்தர்களின் வாழ்வாதாரங்கள் நம்மோடு மறைந்து விடாமல் நமது  எதிர்கால சந்ததியினரும் படித்து பயன்பெறவே சித்தரியல் ஆராய்ச்சி நிலையம் சித்தரியல்.காம் இணையதளமாக செயல்பட்டு வருகிறது. சித்தரியல்.காம் இணையதளத்தின் நோக்கம் நமது ஆதி தமிழர்களான சித்தர்களின் வாழ்க்கை முறை அவர்கள் சித்தி அடைந்த விதம் மற்றும் அவர்களது அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் தொகுத்து உலகத் தமிழர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் உருவாக்கப்பட்டது.

அன்பான சித்தரியல்.காம் இணையதள வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். நமது சித்தரியல்.காம் இணையதளத்தில் வெளியிட உங்களிடமிருந்து சித்தர்கள் பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.

ஆகவே நீங்கள் அறிந்த சித்தர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் நூல்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

சித்தர்களின் அனைத்து நூல்களையும் விளக்கவுரையோடு சித்தரியல்.காம் இணையதளத்தில் படித்து அவற்றின் பெருமையை அறிந்து மகிழுங்கள்.

நன்றி.
நாகலிங்கம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments