குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : ஆள்வினையுடைமை.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
Translation:
In sluggishness is seen misfortune’s lurid
form, the wise declare;
form, the wise declare;
Where man unslothful toils, she of the
lotus flower is there!.
lotus flower is there!.
Explanation:
They say that the black Mudevi (the goddess
of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity)
dwells with the labour of the industrious.
of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity)
dwells with the labour of the industrious.
கலைஞர் உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.
[ads-post]
மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.
மணக்குடவர் உரை:
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.
பரிமேலழகர் உரை:
மா முகடி மடி உளாள் – கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப – திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)




